Thursday, March 30, 2017

சூரியப் பெண்ணே .., !! தமிழ்த் தேரின் பாதச்சுவடுகளில் பயணித்த கேள்வி..,பதில்கள்..,

   
    
                                        

        மார்ச் 8,  உலக மகளிர் தினம் ,உலக அரங்கில் பெண்கள் சந்திக்கும் பல தடைகளை தாண்டி., சாதிக்கும் வல்லமையை போற்றி கொண்டாடும் தினம்.

      அப்படிப்பட்டதொரு.., சிறப்பான மகளிர் தின மாதத்தில், வானலை வளர் தமிழ் - தமிழ் தேர் கண்ட புதுமைப்பெண்.., உமா நாராயணுடன் அளவளாவி அவர் கடந்து வந்த  பாதை.., அவரை ஒரு சிறந்த படைப்பாளி ஆக்கிய விதம் பற்றி,அறிந்து.., இங்ஙனம்   பதிய வைக்க உதவிய  தமிழ் தேருக்கு உளமார்ந்த நன்றிகள்..,!!

எட்டும் அறிவினில் ஆணுக்கி்ங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி..,
என்று புதுமைப் பெண்ணுக்கு சிவப்பு கம்பளம் விரித்த..,
மகாகவியின் அன்றைய பாடலின்,காட்சியை இன்று நம் முன் சாட்சியாக நின்று காட்டும், இவர், குமரி உத்ரா..,!!

    பொதுவாக பெண்களை பொறுமை காக்கும் பூமித்தாயாக, குளிர் நிலவாக., ஒப்பிடுகையில், இவரோ.., “சூரியப் பெண்ணே” என பெண்ணுக்கு ஆற்றலைக் கூட்டி ஆதாரமாக காட்டியுள்ள விதம்.., இவரிடம் பல கேள்விகளை கேட்க தூண்டுகிறது.

    அவ்வண்ணம், கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தங்களின் பார்வைக்கு இதோ...,

     1, நிலவு மகளை..,சூரிய பெண்ணாக.. நினைக்க தூண்டியது..,??

      பெண்கள்.., சாதனைகள்.. மற்றும் சரித்திரம் படைக்கும் நாயகிகளாக மாறும் போது.,அங்கே அவர்கள் உள்ளத்தால், சூரியனை விட பிரகாசமாய் ஜொலிக்கிறார்கள். பெண்களை  நிலவாக.., மலராக..,நினைத்த காலங்கள் போய்விட்டது. எனவே, அந்த பெயர் பொருத்தமாக இருக்கும்.., என நினைத்தேன். இதுவரை யாரும் தேர்வு செய்யாத பெயராகவும் இருக்க வேண்டும். என்பது என் எண்ணமாக இருந்தது. இருளை விலக்க சூரியன் எழுவது போல.., ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் சூரியப் பெண்களாய் திகழ வேண்டும்!.

       2, ங்களுடைய, இந்த இயல்பான அழகான, கற்பனை வளத்திற்கும் ஆர்வத்திற்கும் ஆதாரமாக, பெற்றோரின் வழிகாட்டுதல் படிப்பினை என முன்னூட்டங்கள் உண்டா..,?  
   
       இயற்கையிலேயே என் தந்தைக்கு தமிழின் மேல் அபரிதமான பற்று உண்டு. கற்பனை வளம், கலையார்வம்.,கொண்டவர்கள்..அதனால் எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கலாம். சிறு கவிதைகள் நான் படைத்த போதே , வானொலி நிலையம் என்னை கை நீட்டி அழைத்த போது.., பெண் குழந்தைகளை வெளியே படிக்கவே அனுப்பாத என் தந்தை வானொலிக்கு அழைத்து சென்றது.., முதல் தொடக்கம்..! எனது படைப்புகளின் முதல் வாசகர்களும் எனது பெற்றோர் தான். படிக்க சொல்லி கேட்டு, அதன் பிறகே அனுப்ப சொல்வார்கள். தவறிருந்தால் தந்தை திருத்த சொல்வார்கள்..!!

    3, ள்ளி பருவத்தில் தமிழ் ஆர்வம் பற்றி..,??

    தமிழ் ஆர்வம் உண்டு. மற்ற பாடங்களை விட, தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பேன். பள்ளிக் காலங்களில் பாட்டு போட்டிகளில் முதல் இடத்தில் இருப்பேன். பரிசுகள் வென்ற அனுபவம் உண்டு.! தமிழ் ஆர்வத்தால் ஏழாம் வகுப்பிலேயே.., திருநெல்வேலி வானொலி நிலையம் சென்று பாடிய அனுபவம் உண்டு . பல கவியரங்கத்திற்கும் சென்றுள்ளேன்..,!!

       4, வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்து, பாராட்டி விமர்சித்துள்ளீா்கள்.முதல், முதலாக என்ன எழுதினீர்கள்.அதை வானொலி நிலையத்தார் குறிப்பிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்..,??

          1990 ம் வருடம்,, முதல் கவிதை, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக.., வானொலி நிலையம் எழுத சொல்லி நான் எழுதிய எய்ட்ஸ் கவிதை..,! “மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசம்..,! மனம் அங்கே கொண்டது சகவாசம்..,! பூக்களின் பாசத்தால் நான் பெற்றேன் பரவசம்..,! நாளாக நாளாக தேய்ந்தது சுவாசம்..,! இப்போது நாற்க்கட்டிலில் என் வாசம்..,! என் உயிர் இப்போது எமன் வசம்..,!! இதை வானொலி நிலையத்தார் வாசிக்கும் போது நான் பெற்றேன் பரவசம்..,! அதுவே, என் எழுத்துலகின் முதல் வாசம்..,!!

     5, விதை, சிறுகதை இதில் உமா ஜொலிப்பது எதில்.,? இது     எனக்கானது என தேர்வு செய்வது எதை..,??
 
          எத்தனையோ கவிதைகள் பல இதழ்களிலும், வானொலிகளிலும்,  ஸ்ரீலங்கா, நாகர்கோவில், அமீரகத்தில் இரண்டு வானொலியில் வெளி வந்தும், நான் ஜொலித்தது சிறுகதைகளில் தான்.! நல்ல தரமான கருத்துக்களை வலியுறுத்திய சிறுகதைகள் தான் எனது வெற்றி.!

      சிறுகதை.., படித்து விட்டு போனவர்களின்  மனதில் ஒரு தாக்கத்தை..,கொண்டு வர வேண்டும். எனது புத்தகத்தின் முதல் கதை..,சூரிய பெண்ணே.., நாவலாக எழுத நினைத்து தொடங்கிய கதை..,! இன்றைய அவசர உலகில்..,நாவல் படிக்க நேரமில்லாத நிலை..! சிறுகதைகள் சொல்ல வேண்டிய விசயத்தை சீக்கிரமாக கொண்டு போய் சேர்க்கும். என நான் தேர்வு செய்த களம் இது.! சிறுகதைகள் தான் என் தனி அடையாளம்..,!!

 6, பொதுவாக பெண்களுக்கு பல திறமைகள் இருந்தும், அவை வளர குடும்ப சூழல் இடம் தரவில்லையென்று ஆதங்கபடுவதுண்டு. உங்களின் அனுபவம்..,? சாத்தியக் கூறுகள்..,??

     உண்டு. எனக்கும் அந்த நிலை...,திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் வந்ததுண்டு. தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை இருந்தது. பிரசவகாலத்தில் தாய்வீட்டிற்கு வந்த போது தான் நிறைய எழுத முடிந்தது. பெண்கள் எழுதுவதை வெறும் நேர போக்காக நினைத்தவர்கள் உண்டு புத்தகங்கள், படிப்பது.., எழுதுவது, வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலையாக பார்க்கப் பட்ட நேரம்..அது.! அதையும் மீறி எழுதிய அனுபவம் உண்டு.
  
      7,  பெண்ணின் மனதின் வழியாக சமுதாயத்தை பார்க்கிறீர்களா..,? சமுதாய பார்வையில், பெண்ணின் நிலைமையை பார்க்கிறீா்களா..,??

        ஒரு பெண் என்பதால் பெண்களின் மனநிலையில் சமுதாயத்தை பார்க்கிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் நிறைய விஷயங்கள் என்னை பாதித்தது. அதனால் நிறைய எழுத முடிந்தது.! அவர்களுக்கு., அடிப்படைக்கு  தேவையான கல்வி மறுக்கப்பட்டது, பெண்குழந்தை என்றால் வெறுப்பு காட்டுவது..,  அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகள்.., என்னுடைய கதைகளில் ஆழமாக பதிவு செய்துள்ளேன். பெண்கள் உலகின் புண்ணிய  விதைகள்..  அவர்களை.., விருட்சமாக்காமல் ஏன் வீதிகளில் வீசி எறிகிறார்கள்..,??

8,  முதல் புத்தகமான சூரிய பெண்ணே, உங்களை பெண்ணினத்திற்கு ஒரு முன் மாதிரியாகக் காட்டுகிறது. உங்களின் இலக்கிய பணியில், அடுத்த படைப்பு பற்றி..,??

     சூரியப் பெண்ணே, எனக்கு ஒரு தனி அடையாளத்தை தந்துள்ளது.! அதுவும் தமிழ்த்தேரின் வழியாக என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 89.4 FM  ராம்விக்டா் அவர்கள் ஒரு நாள்..,ஏன் நீங்கள் புத்தகம் வெளியிட கூடாது..? என்ற கேள்வி சிந்திக்க வைத்தது.! அதற்கு பெரும் உதவியாக இருந்த காவிரி மைந்தன் சாருக்கும்,என் கணவருக்கும் நன்றியும் பெருமையும்.., 

     என் கதைகளை படிக்கும் பெண்கள் வீரம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக....திகழ வேண்டும்..,!எனது அடுத்த படைப்பு சுதந்திர போராட்ட தியாகியான எனது தந்தையின் சுய சரிதையாக இருக்கும். “பொக்கிச மனிதர் என் தந்தை"  எனது அடுத்த புத்தகம்.! அடுத்து எனது கவிதை தொகுப்பை வெளியிட வேண்டும்.,!! 

9, ங்களால் மறக்க முடியாத தகவல்கள்., .அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் கருத்துக்கள் ஏதாவது..,?

     சூரியப் பெண்ணே எழுதிய குமரி உத்ரா, பெரிய படிப்பு   படித்தவளாகவோ, அல்லது பலபேரின் தூண்டுதலிலோ வெளி உலகுக்கு வரவில்லை.!
   ஒரு கட்டுப்பாடான குடும்பமான ஒரு பெரிய குடும்பத்தில்.., பிறந்து, பள்ளி வாழ்க்கைக்கு பிறகு,படிப்பு மறுக்கப்பட்டு.., பெண்கள் சத்தமாக சிரிக்க கூட., அனுமதி இல்லாத வீட்டில் இருந்தவள்.!!

     அவ்வீட்டில், இருந்து கொண்டு.., சத்தமில்லாமல் எழுதி.. (ஸ்ரீ லங்கா,நாகா்கோயில்)  வானொலிகளில்..,
சத்தமாக  வாசிக்கப்பட்டு..,பத்திரிகைகளில் முக.,வரியை (போட்டோ) மறைத்து..,எழுதிய சிறுகதைகளால் கடிதங்கள் என் முகவரி தேடி வந்து என் கதவுகளை தட்டிய அந்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது..!!

    அதனால் பெருமை கொண்டு என் தந்தை..,என்னை வானொலிக்கும்.,  கவி அரங்கங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள் .பக்கத்து கிராமம் கூட தெரியாத நான்.., எனது எழுத்துக்களால் வெளி உலகை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.!! குமரி உத்ரா எனும் பெயரும் நிலைத்தது..,!! என் எழுத்து பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..,!! இன்னும் தொடரும். நன்றி..,


                    உமா நாராயண், (குமரி உத்ரா)



Saturday, March 25, 2017

சமுதாயத்தில் பெண்கள்..,!!! கட்டுரை- 1

   உலகம் என்னும் ஓவியம்.., பெண்களால் அழகு பெறுகிறது...,

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..,!! சொன்னவர் பாரதி..,

  மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் யாவரும்.., சமுதாயத்தில் சமமாகவும் மரியாதையுடனும் நடத்த படுவதில்லை..,! ஆனால்.., தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண்கள் சிகரம் தொட தவறியதுமில்லை.!

      ஒரு நாட்டின் வளர்ச்சியை நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம்.,கல்வி அறிவு நிர்ணயிக்கிறது. ஒரு பெண் நலம் பெற்றால்., அவள் குடும்பமும் சமுதாயமும் உயர்வு பெருகிறது.!

  வீட்டிற்குள்ளே, இருந்த பெண் சமுதாயம் தற்போது வானிலும் பறந்து கொண்டிருக்கிறது. இன்று அடுப்பூதும் பெண்கள் ஆயுதக்களம் வரை முன்னேறி வருகின்றனா்.

   “மனிதனை வழி நடத்தி செல்வது கண்கள்..!!! சமுதாயத்தை ஒளி பெற செய்வது பெண்கள்..,!! என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.!

   “வீட்டிலோர் பொந்தில் வாழ்வதை வீர பெண்கள்., விரைவில் ஒழிப்பராம்.” எனும் பாரதியின் கூற்று நனவாகி வருகிறது.

  தமிகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம்., எனும் ஐ.பி .எஸ் அதிகாரி., “சாஷா ஸ்ட்ரா சீமா பால்” எனும் அமைப்பில், துணை ராணுவ படை அதிகாரியாக..,இந்திய நேபாள எல்லைகளை பாதுகாக்கும் பணியில் நியமிக்க பட்டுள்ளார். இந்த பதவிகளுக்கு பெண் அதிகாரி அமர்த்த படுவது இதுவே முதல் முறை..,!! இது பெண்ணின் குலத்துக்கே பெருமை..,!!

    பெண்களின் சிந்தனை பெருமைக்குரியது. சிந்தனைகளின் ஊற்றாக ஆரவாரமில்லாமல் வீட்டிலிருந்தே சுடர் ஒளி ஏற்றுகின்றார்கள் சில `பெண்கள்..!!

      சர்வதேச மகளிர் தினம்.., மார்ச் எட்டாம் தியதி கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தை நாம் எளிதாக கொண்டாடி விடுகிறோம்.!

  இத்தினத்துக்கான போராட்டங்களும்..,வெற்றிகளும் எளிதாக கிடைத்தவை அல்ல..,!! இந்த சமுதாயம்.., பெண்கள் முன்னேற்றம் எனும் பாதையில்., சில மைல்கற்களை தான் கடந்து வந்திருக்கின்றன.

   இந்திய தேசம் கிராமங்களால் ஆனது. அதனால் தான்.., “கிராமங்கள் இநதியாவின் விடியல்..,!!” என காந்திஜி கூறியுள்ளார்.கிராமங்களில்.., கல்வியறிவு, பெண்களின் பாதுகாப்பு இரண்டிலும் தான் பெண்கள் சமுதாயம் உயர வழி இருக்கிறது.!

     சாதனை ஆண்களையே எப்போதும் உதாரணம் காட்டி பேசும் சமுதாயம்..,பெண் சாதனையாளர்களை நினைத்து கூட பார்ப்பதில்லை.!
பெண்கள் உலகின் புண்ணிய விதைகள். அவர்களை விருட்சமாக்கி பார்க்காமல் நெருப்பில் வீசி எறிந்து சில இடங்களில் தவறுகளை செய்தும் வருகிறது. இந்த சமுதாயம்.!

     ஓவ்வொரு ஆணின் பின்பும் ஒரு பெண் இருக்கிறாள்.ஒருவரின் சொந்த நாட்டை அதனால் தான், தாய் நாடு என சொல்கிறோம். ஒவ்வொரு ஆரம்ப பள்ளிக் கூடங்களிலும், ஒரு பெண் தான் ஆசிரியையாக இருப்பார். பெண்களுக்கே உரிய தாய்மை குணம், பொறுமை, பரிவு, கருணை, பண்பு எல்லாமே பெண்களிடத்தில் அடங்கி இருப்பதே இதற்கு காரணம்.!!

      பெண்.., கவிஞா்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வற்றாத அட்சய பாத்திரமாகவே திகழ்கிறாா்கள். பெண்கள்  என்னும் தேவதைகள்..,சமுதாயத்தில்  சாதனை சிகரத்தை தொடும் நாள் வெகு தொலைவில் இல்லை ..,!!! 

  இந்த மகளிர் தின மாதத்தில்.., பெண்ணாகிய நான், பெண்களை பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன்..!!!  

                       உமா நாராயண் (குமரி உத்ரா)         
     
  

  

Friday, March 17, 2017

வணக்கம் ...,!!!












வரவேற்பின் முதல் எழுத்து.., வணக்கம்..,!
வைகறையின் முதல் விழிப்பு..,
சூரிய வணக்கம்..,!!


பாரதத்தில் உலவ விட்ட..,
இறை.. அவனுக்கு
இதயத்திலிருந்து வணக்கம்..,!!


பாதத்தை தரையில் வைக்க..,
உதவிய தாய்மைக்கு..,
தனி வணக்கம்..,!!


பட்டதாரியாய் பயணிக்க வைத்த..,
கல்வி செல்வத்துக்கு..,
காதல் வணக்கம்..,!!


கன்னி அவளை கரம் பிடித்து..,
நிமிர்கையில்..,
பெற்றோரு்க்கு நன்றி வணக்கம்..,!!


இல்லத்தின் இருள் நீக்கி..,
இதயத்தில் இடம் பிடித்த..,
இல்லாளுக்கு  இனிய வணக்கம்..,!!


தந்தை என்ற விழிச்சொல் கேட்டு..,
நெக்குருகி நிக்கையிலே..,
நெஞ்சத்தில் அமர்ந்தவளுக்கு..,
ஓராயிரம் வணக்கம்..,!!


பெற்ற பாசத்தில் பிள்ளையை..,
இன்னொருவருக்கு..,தாரை வார்க்கும் போது..,
தானாய் கூடும் கைகள்..,
மருமகனே என் வணக்கம்..,!!


பேரனை.., பேத்திகளை..,
கொஞ்சி விளையாட..,
தூக்கும் போது.., எட்டிப் பார்க்கும்..,
என் முதுமைக்கு, பாச வணக்கம்..,!!


நானும் தளர்ந்து சாய்ந்து..,
சவமான நாளில்.., நாலு பேர்..,
உதவியோடு போகும் கடைசி  யாத்திரைக்கு..,
என் இறுதி வணக்கம்..,!!!
                           
               
           உமா நாராயண். (குமரி உத்ரா)


Wednesday, March 8, 2017

ஆவதும் பெண்ணாலே...,!!!






கருவறையின் கதகதப்பில்.,
கட்டுண்டு கிடக்கும்..,
ஆணென்ன..,பெண்ணென்ன..,??

எல்லோரையும் அடக்கும்
அதிசய உலகமவள்..,
ஆவதும் பெண்ணாலே..,!!




முதல் சூடு தந்து, 
முதல் பசி போக்கி..,
முதல் யுத்தத்தில்,
கால்களை உதைக்கும்..,

குழந்தைக்கு அன்பின்
உயிர்ப்பை தருபவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!

முதல் இதழ் சத்தம்.,
முதல் தவழல்..,
முதல் பேச்சு..,
அனைத்தையும்.,


புன்னகைக்குள்..,
பூட்டி விடும்,
அன்னை எனும் மாணிக்கமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!


முதல் நடை..,
முதல் எழுத்து..,
அவள் ஆசிர்வாதத்தில்..,


நல்ல ஒரு மகவாய்
வளரும் பூக்களுக்கு..,
வாசமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!



தனிக் கூடு கட்டி..,
அங்கே துயிலுறங்க..,
துணை தேடி,
அதனால் ஒரு மகவை..,


நமக்கென்று ஈன்றாள்..,
இன்னொருவள்..,
ஆவதும் பெண்ணாலே..,!!


பல மனங்கள் 
இணைந்த வீடு குடும்பம்..,
குடும்பத்தின் குதூகலத்தில்
நனைய வைத்து..
,

தலை முறைகளை பெருக்கி..,
தன்னையும் சுருக்கி..,
சாகித்தியத்தை புரட்டும் புனிதமவள்..,!!
ஆவதும் பெண்ணாலே..,!!

           உமா நாராயண், (குமரி உத்ரா)


Monday, March 6, 2017

பெண் என்னும் தீபங்கள்...,!!


பெண் என்னும் தீபம் ..,
அவளிருந்தால் அது ஆலயம்..,!!

பெண் பிறந்தது ஒரு இடமானாலும்..,
பயன் தருவது இன்னொரு இடம்..,
அழகு பூக்களை போல..,!!

விதைகளாய் விழுபவள்..,
பூக்களாய், கனிகளாய்,வாசமாய் ..,
விருட்சமாய் விஸ்வரூபம் எடுப்பவள்..,!!

குழந்தையாய், குமரியாய் சகோதரியாய் ..,
தாயாய் ,தாரமாய்..,
ஆண்களின் சுவாசங்களில் கலந்தவள்..,!!

சக்தியின் பிறப்பிடம் அவள்..,
பாரதி கண்ட புதுமை அவள்..,

மானுடத்தை படைத்த இறைவி அவள்..,
சாகித்தியத்தை புரட்டும் சரித்திரம் அவள்..,!!

இல்லறம் என்ற நந்தவனத்தேரை..,
சாரதியாய் ஓட்டி வருபவள்..,!!

ஒளி விளக்காய், பிரகாசம் தந்து..,
குடும்பத்தை அரவணைத்து செல்லும்..,
பெண் என்னும் தீபம்..,  அவள்..,!!


                               உமா நாராயண்,(குமரி உத்ரா)

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...